என் தந்தானர்மீது இந்திய இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம், என்பவை இந்தியாவின் இதிகாசங்கள்: இதிகாசம் என்ற சொல்லுக்கு இப்படியாகத்தான் நடக்கும் என்று பொருள். எல்லாக் காலத்திலும் ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்தினால் சகோதரத்துவம் மேலோங்கி மனிதர்களின் உலகவாழ்க்கை இன்பமயமாகத்தான் இருக்கும் என்ற குறிக்கோளை, யதார்த்தத்தைக் கூற வருபவைதான் இந்த இரு இதிகாசங்களும். ஒரே குறிக்கோளைக் கூற ஏன் இரண்டு இதிகாசங்கள்? என்று வினா எழுப்பலாம். குகன், சுக்ரீவன், விபீஷ்ணன் உடன்பிறக்காவிட்டாலம் அன்பின் வழியாக இராமன் அவர்களை சகோதரர்களாக ஏற்றுக்கொள்வதன் மூலம் சகோதரத்துவத்தை நேர்மறையில் (உடன்பாட்டில்) எடுத்துக்கூறுவது இராமாயணம். பாண்டவர்கள், கௌரவர்கள், சகோதரர்களாக பிறந்திருந்தாலும் அன்பு செலுத்தத்தவறினால் அழிவார்கள் என்பதை எதிர்மறையில் கூறுவது மகாபாரதம், ஒரு சொல், ஒரு இல், ஒரு வில் என்பது இராமனின் சிறப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்கலாசாரத்தை நேர்மறையாக எடுத்துரைப்பது இராமாயணம், சூதாடினால் வாழ்வு கெடும் என்பது மகாபாரதம். அறம் சார்ந்து வாழ்ந்தால் உலக வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்பதை இராமாயணம் நேர்மறையாகவும், அறம் அற்று வாழ்ந்தால் உலக வாழ்க்கை துன்பமானதாக இருக்கும் என்பதை எதிர்மறையாகவும் கூறுவது மகாபாரதம். சுருக்கமாகச்சொன்னால் உண்மையை பேசு, தர்மத்தின் வழி நட என்றும் கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே, நல்லதைச் செய், நல்லதே நடக்கும் என்ற உயரிய உலகத்தத்துவத்தை எடுத்துக் கூறுபவை இந்த இரு இதிகாசங்களும் என்றால் மிகையாகாது.
தமிழின் பெருமை: முன்னு மாமறை முனிவரும் தேவரும் பிறரும் பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன் மன்னு மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும் என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன். (31) வில்லிப்புத்தூர் ஆழ்வார் திருமாலின் பெருமைகளை இடை இடையே பாட இயலும் என்ற காரணத்தால் நான் மகாபாரதம் எழுதுகிறேன் என்கிறார். வைணவர்களின் நாயகனான திருமாலின் பெருமை என்றால் சைவர்கள் வருத்தப்படமாட்டார்களா? எனவே சிவனையும் அந்த ஒரே பாடலில் பாடவேண்டும் என்று மேற்கண்ட பாடலை எழுதுகின்றார். "மண்ணு மாதவன் பெருமையும்" என்றால் பெருமாலையும், "மண்உமாதவன் பெருமையும்" என்றால் சிவபெருமானையும் குறிக்கும், வகையில் எழுத இயலுகிறது என்றால் அதுதான் தமிழ்மொழியின் பெருமை, வளமை, கம்பராமாயணத்தில் குகன் இராமனுக்கு மீனையும், தேனையும் பரிசாக அளித்தான் என்று எழுதுகிறார் கம்பர். மீன் கடலின் ஆழத்தில் வாழக்கூடியது. தேனீ மலையின் உச்சியில் வாழக்கூடியது. அன்பின் ஆழத்தையும், அன்பின் உயர்வையும் எடுத்து இயம்பவே இவ்வாறு எழுதுகிறார் என்றால் இத்தகைய உயர்வான சொல் வளம் மிக்க மொழி தமிழ்மொழி. எனவேதான் பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று எழுதினார் சுருங்கச்சொன்னால் மொத்த மொழிகளுக்கும் மூத்தமொழி தமிழ்மொழி என்றால் தகும்.
தமிழரின் சிறப்பு: உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவனே முதலில் இறைவணக்கம்தான் பாடி உள்ளான். அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றாள் ஔவை. கோயில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்றார்கள் நம் முன்னோர்கள்.காரணம் இறை நம்பிக்கையும் இறைவழிபாட்டுத்தலங்களும் என்றால் மிகையாகாது. என்சைக்ளோ பீடியா, பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் உலகின் ஒவ்வொரு இனத்தின் தனிச்சிறப்பையும் கூறும்பொழுது தமிழினம் என்று வருகின்றபொழுது கோயில் கட்டுவதில் சிறப்பு பெற்றவர்கள் என்று கூறுகிறது. இதை மிக அழகாகப் பேராசிரியர் முனைவர். கோ.தெய்வநாயகம் அவர்கள் தமிழ்த்திருவிழா சங்கம் 4 நிகழ்வில் எடுத்துரைத்தார். மேலும் கோயில் கட்டுவது (Structural Engineering) என்பது நம் இரத்தத்தில் ஊறியது என்றும் கூறுகிறார். இத்தகைய சிறப்புக்கள் பெற்ற தமிழன் அறம், பொருள், இன்பம், வீடு என்று சிறப்பாக வாழ்ந்துள்ளான் என்கிறார். திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள், இரைதேடுவதுடன் இறையையும் தேடு என்பார்.
ஓரு தமிழ்த்திரைப்படத்தில் முருகக் கடவுளான வேலாயுதம்கையில் வேல் எதற்கு? என்ற விஜயகுமாரியின் கேள்விக்கு தமிழ் ஆசானாய் திரைநாயகன் S.S.R. அவர்கள் மிக அற்புதமாக விளக்கங்களை அளிக்கிறார். நம் அறிவு கூர்மையாகவும், அகலமாகவும் (மேலோட்டமாக இல்லாமல்) ஆழமாகவும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதே தமிழ்க்கடவுள் வேலாயுதத்தின் சிறப்பு என்கிறார். பரமபிதாவைத் தவிர வேறு எவரையும் தொழமாட்டேன் என்ற கிருத்துவப்பாதிரியார் போப் அவர்கள் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகளான “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்றசிவபுராணத்து வரிகளை தன் லெட்டர் (Letter Head) மேற்புறம் திருநீற்றைப்போன்று பூசவைத்ததும், பேசவைத்ததும் தமிழின் சிறப்பு என்கிறார் வாணியம்பாடி பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள். ஈ.வெ.ரா.வின் இறைமறுப்பு: இப்படி எல்லா நிலைகளிலும் இதிகாசம், தமிழ்நூல்கள், தமிழினத்தின்சிறப்பு என எல்லாமே இறைவனோடும், இறைநம்பிக்கையோடும், உலகத்தத்துவத்தை எடுத்துக்கூறுவதாக உள்ளது. மேலும் ஒவ்வொரு திருத்தலத்திலும் தலவிருட்சம் என்று ஒவ்வொரு மரத்தை வைத்து இயற்கையையும் பூஜித்துள்ளான் என்கிறபோது இறைமறுப்பு என்பது ஏற்புடையதா? என்ற வினா எழுகிறது, அனைத்து நிலைகளிலும் வாசித்து, உணர்ந்து, பகுத்தறியும் ஈ.வெ. ரா. இவற்றைப் பகுத்தறியாமல் இருப்பாரா? என்றும் வினா எழுப்புகிறார்கள்? 1971 ல் சேலத்தில், ஈ.வெ.ரா. நடத்திய கடவுள் மறுப்பு மூடநம்பிக்கை ஊர்வலம் இன்றைய நிலையில் சாத்தியப்படுமா? ஏனென்றால் இறை ஏற்பார்களின் எண்ணிக்கையும், நம்பிக்கையும் அதிகரித்துள்ள இக்காலக் கட்டத்தில் சாத்தியமே இல்லை என்று தீர்மானமாகக் கூறுகிறார்கள்? அன்றைக்கே புதுக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, விவேகானந்தர் கல்லூரி மாணவர்கள் இதை எதித்துள்ளனர்.
ஈ.வெ.ரா. வின் சிறப்பு: ஈ.வெ.ரா.விடம் இருந்த துணிவு, பிறருக்கு குறிப்பாக எதிர்கருத்து உடையோருக்கும் உரிய மரியாதை அளிப்பது, வயது குறைந்தவர்கள், வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்தவர்களை மேடைகளில் வசைபாடினால் உடனடியாக தன் கைத்தடியால் தட்டி கண்டிப்பது, பொதுச்சொத்திற்கு ஆசைப்படாமல் இருப்பது, மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைப்பது, தான் நாத்திகராக இருந்தாலும் தன் இல்லம் வந்த திரு.வி.க. விற்கு ஆஸ்திகரைப்போல் திருநீறு வழங்கி உபசரிப்பது போன்ற உயரிய குணங்கள், அவரைப் பின்பற்றி வரும் தலைவர்களிடம் இன்று இருக்கின்றதா? என்ற ஐயம் ஏற்படுகின்றது. ஜனநாயகத்தை பேய் என்றும் சட்டசபையை நோய் என்றும் சொன்னஈ.வெ.ரா. தான் இறக்கும் வரை இந்தக்கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. அரசியலில் பட்டம், பதவிகளைப் பெறுவதற்கு ஒருவன் எந்தக்கீழான காரியங்களையும் செய்வான் என்ற ஈ.வெ.ரா. எவன் காலையும் நக்கத் தயாராக இருப்பான். பொண்டாட்டியையே கூட்டிக்கொடுக்கவும் தயாராக இருப்பான் என்றும் சொன்னார். இன்றைய காலக்கட்டத்தில் இதுதான் நடக்கிறது. தன் பட்டம், பதவிக்காக எதையும் செய்யத்துணிகிறார்கள், குறிப்பாக ஈ.வெ.ரா. தன்கொள்கைக்காக, தன் இயக்கத்திற்காக தன் சொத்துக்கள் அனைத்தையும் அளித்தார். ஆனால் அவர் கொள்கையை கடைபிடிக்கிறோம் என்று கூறுகிறவர்கள் மனைவி, துணைவி, இணைவி என்று பல மணம்புரிந்து பல வாரிசுகளைப்பெற்று அந்தக்கூட்டத் திற்கே சொத்து சேர்க்கிறார்கள், ஈ.வெ.ரா. வின் கொள்கையை மறந்து என்றால் மிகையாகாது. இறுதியாக பல விஷயங்களில் உடன்பாடு இல்லை என்றாலும் மனிதர்களுக்கு மரியாதை அளிப்பதில் உயர்ந்து நிற்கிறார் எனவே ஈ.வெ.ரா சிறியர் அல்ல.
- ஆசிரியர்